Skip to main content

நக்கீரன் இணைய செய்தி எதிரொலி..  எச்சரிக்கை செய்த அமைச்சர்.. 

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

Minister E Periyasamy Warned private hospital


‘பணம் இருந்தால் மட்டுமே படுக்கை! முதல்வரின் உத்தரவை மதிக்காத தனியார் மருத்துவமனை!! நடவடி க்கை எடுக்குமா அரசு?’ என்ற தலைப்பில் நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதோடு இந்த விஷயத்தை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம். இந்நிலையில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் தனியார் மருத்துவமனை டாக்டர்களும், நகர முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஐ. பெரியசாமி, “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்கும் அவர்களைக் காப்பாற்றுவதற்கும் முதல்வரின் உத்தரவின் பேரில் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. அவற்றை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வருங்காலத்தில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

கரோனாவுக்காக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு முதல்வர், ‘கலைஞர் காப்பீட்டுத் திட்ட’த்தின் கீழ் கட்டாயம் சிகிச்சை அளிக்க வேண்டும். இடம் இல்லை என்று சொல்லக் கூடாது. அதுபோல்  தனியார் மருத்துவமனைகளில்  கரோனா நோயாளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் கண்டிப்பாக வசூலிக்கக் கூடாது. அப்படி ஏதும் தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் சிவக்குமார், அரசு தலைமை மருத்துவமனையின் சூப்பிரடண்டு டாக்டர் சுரேஷ் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்