தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கிற ப. சிதம்பரத்திற்கு அளிக்கிற வரவேற்பு காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையமே திணறியது என்கிற செய்தி வருகிற வகையில், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் மூவர்ணக் கொடியோடு அணி திரண்டு வர வேண்டுமென கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் போக்கு காரணமாக, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் சிறையில் இருந்த முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஆணையின் பேரில் ஜாமீனில் விடுதலை பெற்றிருக்கிறார். நிதியமைச்சராக இருந்த போது, மே 2007 ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் ஊடக நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கு வழங்கிய ஒப்புதல் குறித்து 10 ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில்கூட அவருடைய பெயர் இல்லை. அவர் மீதுள்ள குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் திரட்டப்படவில்லை.
ஐ.என்.எக்ஸ். ஊடக நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு வழங்குவதற்கு பொருளாதார விவகார செயலாளர் தலைமையில் 6 செயலாளர்கள் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதில், சாதாரண அலுவல் நடைமுறையின் கீழ் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் 13-வது கையொப்பமிட்டவர் திரு. ப. சிதம்பரம். தமக்கு முன்பாக கையொப்பமிட்டு முடிவெடுத்த 12 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 13-வது கையொப்பமிட்ட திரு. ப. சிதம்பரத்தின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது ஏன் ? இத்தகைய பாரபட்சமான நடவடிக்கையின் மூலம் திரு. ப. சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான அடக்குமுறை பா.ஜ.க. அரசால் ஏவிவிடப்பட்டது.
மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிற மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் பொய் வழக்கு போட்டு திரு. ப. சிதம்பரத்தின் ஜனநாயக செயல்பாடுகளை முடக்கி விடலாம் என பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. ஒரே வழக்கிற்கு இரண்டு விதமான விசாரணை அமைப்புகள். ஒன்றில் விடுதலைக் கிடைக்கிற நிலையில், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இதைவிட பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் போக்கிற்கு வேறு சான்று தேவையில்லை.
திரு. ப. சிதம்பரம் அவர்கள் சிறையில் இருந்த 106 நாட்களில், 45 நாட்கள் எந்த விசாரணையையும் அவரிடம் எந்த அமைப்புகளும் நடத்தவில்லை. ஆனால், ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிற போது அவரை விடுதலை செய்யக் கூடாது, இன்னும் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டு, காவல் நீட்டிப்பு கேட்பது தொடர்கதையாக நடந்து வந்தது. இத்தனை நாட்கள் சிறையில் இருந்த போது எத்தகைய ஆதாரங்கள் திரட்டப்பட்டது ? ஏதாவது ஆவணங்கள் கிடைத்ததா ? ஏதாவது வங்கிக் கணக்கு விபரங்கள் கிடைத்ததா ? திரு. ப. சிதம்பரத்திற்கு எதிராக மத்திய புலனாய்வுத்துறையும், அமலாக்கத்துறையும் 106 நாட்கள் விசாரணையில் என்ன ஆதாரங்கள் திரட்டப்பட்டது என்பதற்கு நாட்டு மக்களிடம் விளக்கம் கூற வேண்டிய பொறுப்பு விசாரணை அமைப்புகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசின் கடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து 106 நாட்கள் சிறையில் இருந்து விடுதலையாகி, வருகிற 7.12.2019 சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு திரு. ப. சிதம்பரம் அவர்கள் வருகை புரிய இருக்கிறார். சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ள அவர் மிகுந்த மனவலிமையையும், துணிவையும் பெற்றிருப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த காலங்களில் பா.ஜ.க. அரசை எதிர்த்து எத்தகைய ஏவுகணைகளை தொடுத்தாரோ, அதைவிட மிக வலிமையான முறையில் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அரசியல் பேராண்மையோடு விமர்சனங்களை மேற்கொள்வார் என நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அவர் மீது இருந்த நம்பகத்தன்மை இன்று பல மடங்கு கூடியிருக்கிறது. நாம் கொடுக்கிற மாபெரும் வரவேற்பு திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்குகிற வகையில் அமைய வேண்டும்.
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கிற திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கு அளிக்கிற வரவேற்பு காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையமே திணறியது என்கிற செய்தி வருகிற வகையில், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் மூவர்ணக் கொடியோடு அணி திரண்டு வர வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை விமான நிலைய வரவேற்பிற்குப் பிறகு, சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மாலை 4 மணியளவில் இன்றைய அரசியல் சூழல் குறித்து திரு. ப. சிதம்பரம் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார். இவர் ஆற்ற இருக்கின்ற உரையை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவரது சங்கநாதத்தைக் கேட்கிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கூட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மறுநாள் 8.12.2019 அன்று திரு. ப. சிதம்பரம் அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்து, அங்கிருந்து தமது சொந்த மாவட்டமான சிவகங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கேயும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்று வரவேற்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.