பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய வெளியுறவு இணை அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் முஷாரபுக்கு தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், "முஷாரப் மறைந்து விட்டார். முன்பு இந்தியாவின் எதிரியாக இருந்த இவர் 2002 முதல் 2007 வரை உள்ள காலகட்டத்தில் சமாதானத்துக்கான உண்மையான படையாக தன்னை மாற்றிக் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையில் இருந்த காலகட்டத்தில் அவரை ஆண்டுதோறும் சந்தித்தேன். அவர் தனது வியூக சிந்தனையில் மிகவும் தெளிவாக செயல்பட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா தனது ட்விட்டர் பதிவில், "முஷாரப் கார்கில் தாக்குதலுக்கு காரணமானவர். சர்வாதிகாரியாக செயல்பட்டவர். கொடிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர். தாலிபான்களையும், பின்லேடனையும் சகோதரர்கள் என்று அழைத்தவர். கார்கில் போரின் போது இறந்த பாகிஸ்தான் போர் வீரர்களின் உடலைக் கூடப் பெற்றுக்கொள்ள மறுத்தவர். ராகுல் காந்தியை ஜெண்டில்மேன் என்றும், தனது மகன், மனைவியை மன்மோகன் சிங் விருந்துக்கு அழைத்ததாகக் கூறியவர் முஷாரப். இதனால் தான் காங்கிரஸ் கட்சி முஷாரப் உடன் நெருங்குவதற்கு காரணமாகிவிட்டது போல. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370யை எதிர்த்தது, துல்லியத் தாக்குதலை சந்தேகித்தது என பாகிஸ்தான் கருத்தை காங்கிரஸ் எதிரொலிப்பது வெட்கக்கேடானது" என்று தெரிவித்துள்ளார்.