குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராப் பாடல் பாடிய அறிவு என்ற இளைஞரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த அறிவு என்ற இளைஞர் தனிமனித ராப் பாடல் மூலமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இந்தப் பாடலை தெருகுரல் என்ற பெயரில் வாரம் ஒருநாள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாடி வந்துள்ளார். கடந்த வாரம் செம்மொழி பூங்கா அருகே இவர் பாடிய இந்த பாடலை இணையதளம் வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்த்து அந்தப் பாடலைப் பாடிய இளைஞரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் கலைஞரின் ஓராண்டு முரசொலி மலரை அந்த இளைஞருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். அதனை தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக பாடகர் அறிவு தனது கையொப்பத்தை பதிவு செய்தார். இந்நிகழ்வின் போது திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.