திருச்சியில் நேற்று (15.10.2021) விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. விசிக 43 ஒன்றிய கவுன்சில் இடங்களிலும் 4 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் போட்டியிட்டது. அதில் 27 ஒன்றிய கவுன்சில் இடங்களையும் 3 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளோம். இது, அனைத்து தரப்பு மக்களும் விசிகவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.
வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை தடுக்க இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாகப் பார்க்க முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் அதை வரவேற்போம்.
அதிமுகவிற்கு வலிமையான தலைமை அமையவில்லை. பாஜகவை சார்ந்து இயங்கும் வரையில் அதிமுகவிற்கு இந்த சரிவு தொடரும். அதிமுகவினரால் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்களைக் கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதிமுகவில் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இருந்த கட்டுக்கோப்பு தற்போது இல்லை. அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டேன் என அறிவித்துவிட்டு மீண்டும் சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. சசிகலா விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது.
நீட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டுவது பாராட்டத்தக்கது. தமிழ்நாடு சட்டபேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் கையெழுத்துப்பெற்று தர வேண்டியது பாஜக அரசின் கடமை” என்று அவர் தெரிவித்தார்.