தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று (18-11-23) தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட்டு அந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம் ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி வந்தது?. மக்கள் வரிப்பணத்தை வாங்கிக்கொண்டு எங்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் இது போன்ற ஆளுநரை நியமித்து குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். எல்லாரும் இந்த ஆளுநரை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் இந்த பதவியே இருக்கக் கூடாது என்கிறோம்.
என்னிடம் அரசியல் புரிதல் இல்லை என்றால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் அரசியலே இல்லை. பா.ஜ.கவின் இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஏதாவது சாதனை செய்தோம் என்று அண்ணாமலையால் சொல்ல முடியுமா?. திமுக வின் ஊழலை பற்றி மட்டுமே பேசி வருகிறார். மாறாக அதிமுகவின் ஊழலை பற்றியோ அல்லது லஞ்சம் பற்றியோ சொல்ல மறுக்கிறார். அவருக்கு எதைப் பற்றியும் பேசத் தகுதி இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்றால் ராமர் கோவிலுக்கு இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார். இறைவன் கூட இலவசம் ஆகிவிட்டாரா?.ராமர், பா.ஜ.க கட்சியின் தலைவர் போல் பேசி வருகிறார்கள். கடவுள் வாழ்க என்பது எப்படி ஒரு கட்சியின் முழக்கமாக இருக்க முடியும்?” என்று கூறினார்.