



மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் புகைப்படம், சிலை போன்றவற்றிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும், இணையத்தில் பதிவிட்டும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமிழக மக்களுக்காக, அயராது உழைத்த ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாளான இன்று அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து அவரது வழியில் பயணிப்போம்” என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.