13 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட, பரப்பளவில் பெரிய மாவட்டமாக வேலூர் இருந்ததால், கிழக்கு -மேற்கு -மத்தி என கட்சியின் நிர்வாக மாவட்டங்களாகப் பிரித்துக் கொண்டது தி.மு.க. ஆனால் ஆளும்கட்சியான அ.தி.மு.க.விலோ கிழக்கு, மேற்கு என இரு மாவட்டங்கள்தான், இரண்டு மா.செ.க்கள்தான். சமீபத்தில் வேலூர் மாவட்டத்தை அரசு நிர்வாக வசதிக்காக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரித்தார் முதல்வர் எடப்பாடி.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி. குப்பம், குடியாத்தம் என 5 சட்ட மன்றத் தொகுதிகள் வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம் பாடி, ஆம்பூர் என 4 சட்டமன்றத் தொகுதிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட் டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் என 4 சட்டமன்றத் தொகுதிகளும் வருகின்றன.
இப்படி மாவட்டங்களும் சட்டமன்றத் தொகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்ட பின்தான் அ.தி.மு.க.வில் மல்லுக் கட்டு ஆரம்பமாகி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.சுக்கும் இணை ஒருங்கிணைப்பாளரான இ.பி.எஸ்.சுக் கும் மண்டையிடியும் ஆரம்பமாகியுள்ளது.
"மூணாகப் பிரிச்சும் உங்க கட்சிக்குள் என்னதாங்க பிரச்சனை' என ராணிப்பேட்டை அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். 2002-லேயே கட்சி நிர்வாக வசதிக்காக வேலூரை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது கட்சித் தலைமை. அதுக்கப்புறம் வேலூர் மாநகரம் என பிரிக்கப்பட்டது. 2011-ல் எங்க அம்மா ஆட்சிக்கு வந்ததும், கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜானையும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்யையும் மந்திரியாக்கினார்.
மந்திரியாக்கிய கொஞ்ச நாட்களிலேயே இருவரையும் அதிரடியாக நீக்கினார். 2012-ல் வீரமணியை மந்திரியாக்கினார். 2016-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சசிகலா புண்ணியத்தால் மந்திரியாகவே நீடித்தார் வீரமணி. இஸ்லாம் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக வாணியம்பாடி எம். எல்.ஏ. நிலோபர் கபிலை மந்திரியாக்கினார் அம்மா. இரண்டு பேருமே பக்கத்து பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.க்கள், மேற்கு மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள்.
சசிகலாவின் ஆசியுடன் கட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட வீரமணி, வேலூர் மாநகர மாவட்டத்தை தன்னுடைய மேற்கு மாவட்டத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது ஆரம்பித்த வீரமணியின் ராஜ்ஜியம் இப்போதுவரை தொடர்வதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவுடன் ராணிப் பேட்டை மாவட்டத்திற்கு மந்திரி பதவி கேட்க ஆரம்பிச் சுருக்கோம். இந்த மாவட் டத்தின் எம்.எல். ஏ.க்களான அரக் கோணம் ரவிக்கும் சோளிங்கர் சம்பத்திற்கு மந்திரியாகும் தகுதி இல்லையா என்ன?'' என ஏகத்திற்கும் கொந்தளித்தார். இவரின் கொந்தளிப்பு இப்படி என்றால், வேலூர் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரின் புலம்பலோ வேறு மாதிரியாக இருக்கிறது. “வேலூர் மேற்கு மா.செ.வாக அமைச்சர் வீரமணியும் கிழக்கு மா.செ. வாக அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியும் இருக்கிறார்கள். இருவருக்கும் எப்போதும் ஒத்து வராது. அமைச்சர்கள் வீரமணியும் நிலோபர் கபிலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் வருவதால், அந்த எல்லையைத் தாண்டி வரமாட்டார்கள். அதே போல ரவியும் ராணிப்பேட்டை மாவட் டத்தைத் தாண்டி, கட்சி வேலை பார்க்க மாட்டாரு.
அதனால இப்ப வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள்தான் தத்தளிச்சிக்கிட்டிருக்கோம். சுருக்கமா சொல்லணும்னா இந்த மாவட்டத்திற்கு மந்திரியும் இல்ல, மா.செ. வும் இல்ல. வரப்போகும் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களில் ஜெயிக்கணும்னா ஒண்ணு வேலூர் மாவட்டத்திற்கு மந்திரி பதவி கொடுங்க, இல்ல மா.செ.வையாவது நியமிங்கன்னு ஓ.பி.எஸ். சிடமும் இ.பி.எஸ்.சிட மும் சொல்லிட்டோம். ஆனா அவர்கள் இரண்டு பேரும் தங்களது ஆட்களை நியமிப்பதில் மல்லுக்கட்டுகிறார்கள்.
"தனக்கு அடக்கமான ஆளுதான் மா.செ.வா வரணும், இல்லேன்னா மா.செ.வே வேண்டாம்'னு அமைச்சர் வீரமணி மல்லுக்கட்டுகிறார். இந்த மல்லுக் கட்டின் பின்னணியில் இருக்கும் சூட்சுமம் என்ன, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூருக்கு 800 கோடி ஒதுக்கப்பட்டு, வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு.
இதேபோல் 400 கோடி ஒதுக்கீட்டில் பொதுப்பணித்துறை வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு. இதுக்கு மேல நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக்கங்க'' என்றார். கணக்குப் போட நினைத்தவர்கள் கச்சிதமாக கணக்கு போட்ட பிறகு நாம கணக்குப் போட்டு என்ன பண்றது?!