கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவர் பாஜகவில் இணையப் போகிறாரா என்பது குறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''அரசியல் கட்சியில் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. நடந்தால் அது நடக்கட்டும். எந்த கட்சியாக இருந்தாலும் பிரதமர் மோடியின் சித்தாந்தத்தையும், தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நினைக்கும் எந்த தலைவர்களாக இருந்தாலும் எங்களிடம் இணையலாம். இரண்டாவது, இணைந்த எல்லாத் தலைவர்களும் தேசியம் என்கின்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் நம்மிடம் வந்திருக்கிறார்கள். எனவே நமது கட்சிக்கு யார் வந்தாலும் எங்களுக்கு சந்தோஷம்தான்.
முக்கியமான விஷயம் சித்தாந்தத்தின் அடிப்படையில் அவர்கள் வரவேண்டும். அரசியலில் யாருமே ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உதாரணத்திற்கு வேறு கட்சியிலிருந்து பாஜகவிற்கு வருகிறார்கள் என்றால், அந்தக் கட்சிக்குள் அவர்களுக்கு பிரச்சனை இருக்கும், அவர்களால் வேலை செய்ய முடியாத ஒரு சூழ்நிலை இருக்கும், அதே சமயம் மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என விருப்பப்படுவார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்க எப்போதுமே தமிழக பாஜக தயாராக இருக்கிறது'' என்றார்.