கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகள் சார்பில் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கவும், விவசாயிகளின் தேசிய வங்கி, கூட்டுறவு வங்கி, கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்திட, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்திற்கு சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து ரயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் விவசாயிகள் சாலையில் அமர்ந்து பேரூந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதேபோல் வடக்கு வீதி தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் மாதவன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சின்னதுரை, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பாபு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், கற்பனை செல்வம். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சங்கமேஸ்வரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.