Published on 27/07/2019 | Edited on 27/07/2019
தேனி தொகுதியில் அதிமுக சார்பாக வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரவீந்திரநாத் குமார். இவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வரின் மகனாவார். மக்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி ஆதரவு தெரிவித்தது அக்கட்சிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. ஓபிஎஸ் மகன் ஆதரவு கொடுத்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக எப்போதும் ஆதரவு தெரிவிக்காது என்று தெரிவித்தார். ஓபிஎஸ் மகன் மக்களவையில் ஆதரவு கொடுத்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை வெளிக்கொண்டு வந்துள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முத்தலாக் மசோதாவிற்கு ஓபிஎஸ் மகன் ஆதரவு கொடுத்தது எடப்பாடிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு கொடுத்துள்ளதால் வேலூரில் இருக்கும் சிறுபான்மையின மக்களிடையே வாக்குகளை சேகரிப்பதில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் மகன் ஆதரவு தெரிவித்த பின்னணி பற்றி விசாரித்த போது, சமீபத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்ற போது அமைச்சரவை விரிவாக்கத்தை போது தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று பாஜக தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. அதற்காக தான் முத்தலாக் மசோதாவிற்கு ஓபிஎஸ் மகன் ஆதரவு கொடுத்துள்ளார் என்று அரசியல் கூறிவருகின்றனர்.