‘தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு கேரளாவில் ரூ.2,000 கோடிக்கு சொத்து உள்ளதாக கூறும் தங்க தமிழ்செல்வன், அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தால் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவருக்கு கொடுக்கத் தயார். அவர் நிரூபிக்கத் தவறினால் அரசியலைவிட்டு விலகத் தயாரா?’ என ஓ.பி.எஸ். இளைய மகனான ஜெயபிரதீப், தமிழ்ச்செல்வனுக்கு சவால் விட்டுள்ளார்.
தி.மு.க. தேனி வடக்கு மாவட்டச் செயலாளரான தங்க தமிழ்செல்வன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேனி கே.ஆர்.ஆர். நகரில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ரூ.2,000 கோடிக்கு கேரளாவில் சொத்து உள்ளதாக அம்மாநில பத்திரிக்கை செய்தி வெளியிட்டதை மேற்கோள் காட்டி குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் தான் சொல்லும் குற்றச்சாட்டு பொய் என்றால் ‘என் மீது வேண்டுமென்றால் வழக்குத் தொடரட்டும்’ என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டிற்கு சவால்விடும் விதமாக ஓ.பி.எஸ்.-ன் இளைய மகன் ஜெயபிரதீப், தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், எங்களுக்கு கேரளாவில் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளோம் என பத்திரிகையாளர் சந்திப்பில் பொய் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் தமிழக மக்களை ஏமாளிகள் என்று நினைத்துக்கொண்டு பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதை இத்தோடு அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எங்களுக்கு சொத்து இருப்பதாக கூறும் கேரள மாநிலத்திற்கு அவருடன் நான் வர தயாராக உள்ளேன். உண்மையாகவே நாங்கள் சொத்து சேர்த்துள்ளோம் என ஒரு சதுர அடி நிலம் இருக்கிறது என்று நிரூபித்தால்கூட நான் எனது சொத்துக்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிடுகிறேன். அவ்வாறு அவர் நிரூபிக்கத் தவறினால் இனிமேல் தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டும். நான் தயாராக இருக்கிறேன் அவர் தயாராக இருக்கிறாரா’ என பதிவிட்டுள்ளார். இது தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.