
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா (வயது 70) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (04.03.2025) காலை காலமானார். இதய அறுவை சிகிச்சை செய்திருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூருவில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நந்தலாலாவின் உடல் திருச்சியிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைந்த கவிஞர் நந்தலாலாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவராகவும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். தலைசிறந்த கவிஞர் பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா உடல்நலக்குறைவால் மறைவுற்ற நிலையில், திருச்சி கருமண்டபத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று நந்தலாலாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மீது பெரும் பற்று கொண்டவர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது மதிப்பும், மரியாதையும் கொண்ட பண்பாளர் நந்தலாலாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், த.மு.எ.க.ச தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம். கவிஞர் நந்தலாலா மறைந்தாலும், அவரது பணிகள் என்றும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.