தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
நகராட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், சட்டசபையில் இது குறித்து முதல்வர் விளக்கமளித்துள்ளார். சொத்துவரி உயர்வு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஆதாரம் தேவை என்பதால் வரி உயர்வு தவிர்க்க முடியாதது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் சொத்துவரி சீராய்வில் கட்டிடங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு பிரித்து வரி உயர்வு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், சொத்துவரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை எனத் தெரிவித்த முதல்வர், அரசுக்கு மக்களும் எதிர்க்கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.