
'இந்தி திணிப்பை எதிர்ப்போம்' என்கிற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் திமுகவின் தொண்டர்களுக்கு மடல் எழுதி வருகிறார். இன்று அவர் எழுதியுள்ள மடலில் 'அண்ணா கேட்டதை அவரது தமிழ்நாடு கேட்கிறது' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 'நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய் மொழியையும் மதிக்கிறோம். இந்தி தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள் தான். இந்திய அரசியல் சட்டம் 351 வது பிரிவை சுட்டிக்காட்டி இந்தி மொழியை வளர்க்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொள்கிறது. செப்டம்பர் 14ஆம் நாளை இந்தி திவஸ் என்ற பெயரில் கொண்டாடுகிறது. அந்த நாளில் இந்தி திணிப்பு முழக்கங்களை ஒன்றிய ஆட்சியாளர்களை முன் வைக்கிறார்கள்.
கன்னடத்தைப் புறக்கணித்து இந்தியை திணிப்பவர்களை ஏற்க மாட்டோம் என்று கூறி கர்நாடகாவில் இந்திய எழுத்துக்களை அழிப்பது பற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க தயக்கம் ஏன்? எங்கள் அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதை தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது லட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக் கொண்டே இருப்போம்' என தெரிவித்துள்ளார்.