ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பரப்புரை சூடு பிடித்திருக்கும் நிலையில் மறுபுறம் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்ஜய் குமார் அமர்வு வாசித்தது. இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என எடுத்துக்கொண்டால் ஓபிஎஸ் நீக்கமும் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஓபிஎஸ் கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டார் என்பதன் காரணமாக பொதுக்குழுவில் அவரும் அவரது தரப்பும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என எடப்பாடி தரப்பு வாதாடியது.
எடப்பாடி கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்படுகிறார். அவர் கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார். மேலும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், கட்சியை தன்வசப்படுத்தவே இபிஎஸ் முயல்கிறார் என ஓபிஎஸ் தரப்பு வாதாடியது. இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கமும் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவரது பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வது, வெடிவைத்துக் கொண்டாடுவது எனத் துள்ளிக் குதிக்கின்றனர். அதேசமயத்தில் ஓபிஎஸ் அணியினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.