கோவை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. கோவை மக்களின் வாழ்க்கைப் பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசத்தினை ஒன்றாகப் பாடிவிட்டு கடவுள்களை வேண்டிவிட்டு வெளியே வந்துள்ளோம்.
23ம் தேதி காலை 4 மணிக்கு அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் கோவை இதைத் தாண்டி செல்ல வேண்டும். தமிழகத்தில் முன்னணி நகரமாக இருந்த கோவை 1998 குண்டுவெடிப்பிற்குப் பிறகு பின்னோக்கி சென்றுள்ளது. மக்களும் தொழிலதிபர்களும் மறுபடியும் கோவையை முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு விபத்து நடந்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்து பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கு நன்றிக்கடனை செலுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
சதிகாரர்கள் நம்மைப் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றார்கள். சம்பந்தப்பட்டவர்களை முதல் நாளில் பாஜக கட்சி குற்றவாளிகள் என்று தான் சொல்லுகிறது. அவர்களுக்கு எவ்விதமான மதச் சாயமும் பூசவில்லை.
மாநில அரசுக்கு கேள்விகளை வைப்பது அது நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகத் தானே தவிர அதற்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. பாஜகவைப் பொறுத்த வரை யாரையும் பிரித்து வலிமையைக் குறைத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. பாஜகவின் அதிகாரப் பூர்வ நிலைப்பாடு அதிமுக உள்விவகாரத்தில் தலையிடமாட்டோம்.
எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறோம் என்று சொல்லக் கூடாது. சில நண்பர்கள் வரம்பு மீறும் பொழுது தான் இது போன்று நடக்கிறது. உங்களுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடு கிடையாது. பத்திரிகையாளர்களைப் பார்த்து யாரும் குரங்கு என்று சொல்லவில்லை. குரங்கு போல ஏன் தாவித் தாவி என்னைப் பேச விடாமல் செய்கிறீர்கள் என்று தான் சொன்னேன். அதனால், இரண்டும் வேறு. என்னைப் பொறுத்த வரை இரண்டும் ஒன்று கிடையாது. இவை அனைத்துமே உவமை. நான் தவறு செய்யவில்லை. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” எனக் கூறினார்.