தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தன் பிறந்தநாளிலேயே கரோனாவுக்கு பலியானது, ஆளும் கட்சியையும் கலங்க வைத்துள்ளது. இந்தியாவிலேயே கரோனாவுக்குப் பலியான முதல் எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன். இவர் சட்டமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்கக் கூடியவர். தனிப்பட்ட முறையில் பலருக்கும் உதவக்கூடியவர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் களமிறங்கி பணியாற்றி பலியாயிருப்பது வருத்தம்தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
அதாவது, 10-ஆம் தேதி அதிகாலையிலேயே நிலைமையைத் தெரிந்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலின், கலங்கிவிட்டதாகச் சொல்கின்றனர். அந்தத் துயரத்தோடு வீடு திரும்பிய ஸ்டாலினின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. எதிர்முனையில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், "ரொம்ப வருத்தமா இருக்கு. தி.மு.க.வுக்கும் உங்களுக்கும் அன்பழகன் எந்த அளவுக்கு முக்கியமானவர்னு எனக்குத் தெரியும். அவரது இழப்பை யாராலும் ஈடுகட்டமுடியாதுன்னு சொல்லியிருக்கார். இந்த ஆறுதல் ஃபோனை எதிர்பார்க்காத ஸ்டாலின் ஒரு நிமிடம் திகைத்தாலும், தன்னைத் தேற்றிக் கொண்டு, அன்பழகன் எவ்வளவு நம்பிக்கையாக மருத்துவமனையில் இருந்து பேசினார் என்றும், கடைசியில் வராமலே சென்றுவிட்டார் என்றும் தழுதழுத்த குரலில் கூறியுள்ளார்.