கடந்த 29ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு அராசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி. தினகரன் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நதிநீர் உரிமைகள் பறிபோகும் வகையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு வரும் நிலையில், இந்த மசோதா மாநிலங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் நடுநிலையோடு செயல்படாதபோது, தற்போது மாநிலங்களிடம் இருக்கும் அணைகளின் கட்டுப்பாடும் அவர்களின் கைகளில் சென்றுவிட்டால் நிலைமை என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிராக எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடமே குவிக்கும் இத்தகைய செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.