பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியரை சரமாரியாக தாக்கிய சேர்மன் கணவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வீடியோ ஆதாரம் கொடுத்தும் ஊழியர் மீதே வழக்குபதிவு செய்து கைது செய்தது கவலையளிக்கிறது என்கிறார்கள் ஊழியர்கள் பலரும்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூரில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் கூகூர் கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்கிற இளைஞர் வேலை பார்த்து வருகிறார். பரபரப்பாகவே இருக்கும் அந்த பெட்ரோல் பங்கிற்கு கீழ்வேளூர் திமுக சேர்மன் வாசுகியும், அவரது கணவரும் திமுக ஒன்றிய துனை செயலாளருமான நாகராஜனும் காரில் வந்து 300 ரூபாய் கொடுத்து டீசல் போட சொன்னார்கள். ஊழியர், டீசல் போட்டுக்கொண்டிருக்கும் போது டீசல் பம்ப் நின்றதால் நாகராஜனுக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே நாகராஜன் டீசல் போட்டுக்கொண்டிருந்த ஊழியர் ராஜபாண்டியனை தாக்குகியுள்ளார். ஊழியரும் நாகராஜனை திருப்பி தாக்க பிரச்சனை பெரிதானது. இந்த விஷயம் அறிந்து அங்கு விரைந்து வந்த சேர்மன் கணவரின் ஆதரவாளர்கள் பெட்ரோல் பங்கில் இருந்த ராஜபாண்டியனையும் அங்குள்ள அறைகளையும் அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
ராஜபாண்டியன் டீசல் போடும்போது நாகராஜன் சண்டைக்கு இழுப்பதும், ஊழியரை தாக்கியதும் அறைகளில் புகுந்து ரகளை செய்வதும் அங்குள்ள கேமாராவில் பதிவாகி, அந்த வீடியோ காட்சிகளில் வைரலாகிவருகிறது. இந்த விவகாரம் பிரியாணிக்கடை விவகாரம்போல மாறிவிடுமோ என்கிற அச்சத்தில் ஒ.து.செ. நாகராஜன் மருத்துவமனையில் அட்மிட் ஆகி, அங்கிருந்தபடியே புகாரை கொடுத்து கீழ்வேளூர் போலிஸார் மூலம் வழக்குப்போட வைத்து அடி வாங்கிய ஊழியரையே கைது செய்ய வைத்துள்ளார். இந்த விவகாரத்தை நாகை மாவட்ட பெட்ரோல் பங்க் சங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் சும்மாவிடுவதாக இல்லை என திமுக தலைவரிடம் புகார் அளிக்க தயாராகிவருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம், "நாகராஜன் எப்போதுமே கோபம் அடையக்கூடியவர். உள்ளாட்சித்தேர்தலில் ரகளையில் ஈடுபட்டார் என அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. சாதாரன ஊழியர் பங்கில் உள்ள பெட்ரோல் டீப் பழுதானதற்கு அவர் என்ன செய்வார். அதற்கு சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கக்கூடிய இடத்தில் கட்சி பொறுப்பில் இருக்கும் ஒருவர், பொருப்பாக நடந்துகொள்ளாமல் முதலில் கை நீட்டுகிறார். இவர் யார் என தெரியாமல் அந்த இளைஞர் திருப்பி அடிக்கிறான். இதற்காக ஆதரவாளர்களை வரவழைத்து அந்த இளைஞரை தாக்கியதோடு இல்லாமல் வழக்குபோட வைத்து கைது செய்ய வைத்திருப்பது வேதனையானது. நாகை மாவட்ட காவல்துறை ஆய்வாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்கிறார்கள்.
சேர்மன் தரப்பினரோ, "பேசிக்கொண்டிருக்கும்போதே தவறான வார்த்தைகளைகூறி திட்டினான். அதனால் அறைந்தார். அதற்கு அவனும் அங்குள்ளவர்களும் தாக்கியது தர்மமா?" என்கிறார்கள்.