Skip to main content

மகனை தலைவராக்க அப்பா கடும் முயற்சி ! -காங்கிரஸ் கலாட்டா !

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

 

          

ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக தனது ஆதரவாளர் கே.எஸ் அழகிரியை கொண்டு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம். ஐ.என்.எக்ஸ்.மீடியா ஊழல் வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற சூழலில், அவருக்கு ஆதரவாக எந்த துரும்பையும் அழகிரி எடுத்துப் போடவில்லை. சிதம்பரத்தின் ஆதரவாளர்களை புறக்கணிக்கப்பது என்பதில் ஆரம்பித்து பல்வேறு நிலைகளில் அழகிரியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, சிதம்பரத்தின் ஆதரவாளர் என்கிற நிலையையே மறந்து போனார் அழகிரி. இதனால் சிதம்பரம் தரப்புக்கும் அழகிரிக்குமிடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. 

 

congress



           

இந்த சூழலில், சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையானார் சிதம்பரம். அப்போதிலிருந்தே, அழகிரியை மாற்ற வேண்டும் என அவரிடம் போர்க்கொடி தூக்கி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். சிதம்பரமும் அழகிரியின் செயல்பாடுகளில் அதிர்ப்தியடைந்து வந்தார். முக்கிய விசயங்கள் எதுவும் அவரிடம் ஆலோசனை நடத்துவதில்லை சிதம்பரம். இப்படிப்பட்ட சூழலில், மத்திய மோடி அரசின் புதிய தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், மோடி அரசின் பட்ஜெட் குறித்தும் தேவக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
         

வருகிற 15-ந்தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த பொதுக்கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைக்கப்படவில்லை. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில்தான் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் சிறப்புரையாற்றுகிறார்கள்.  தமிழக காங்கிரஸ் சார்பில் நடக்கும் ஒரு பொதுக்கூட்டம் மாநில தலைவர் தலைமையில் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
          

 இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘’ சிதம்பரத்திற்கும் அழகிரிக்குமான விரிசல் விரிவடைந்து கொண்டே வருகிறது. அழகிரியை மாற்றியே ஆக வேண்டும் என சிதம்பரத்திற்கு கொடுக்கப்படும் தொடர் வலியுறுத்தல்களால், தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்து வருகிறார் சிதம்பரம். அதனால்தான், அவர் சிறப்புரையாற்றும் முக்கிய பொதுக்கூட்டத்தில் அழகிரியை அழைக்க வேண்டாம் என கே.ஆர்.ராமசாமியிடம் சொன்னதுடன், ராமசாமி தலைமையிலேயே கூட்டம் நடக்கட்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார் சிதம்பரம். அதன்படிதான் கூட்டம் நடக்கிறது. 



இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அழகிரியை தூக்கிவிட்டு  புதிய தலைவராக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சிதம்பரம் ‘’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவை விமர்சித்து அறிக்கை வாசித்திருந்தார் கே.எஸ்.அழகிரி. அந்த அறிக்கை திமுக தலைமையை கோபப்படுத்தியது.  தங்களது அதிர்ப்தியை சோனியாகாந்திக்கும் அப்போது தெரிவித்தது திமுக தலைமை. இதனையடுத்து, அழகிரிக்கு கொடுக்கப்பட்ட அட்வைசின்படி, சமாதான அறிக்கை வெளியிட்டதுடன், மு.க.ஸ்டாலினை சந்தித்தும் சமாதானப்படுத்தினார் அழகிரி. ஆனாலும், அழகிரி மீது திமுகவின் கோபம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதானிருக்கிறது. அழகிரிக்கு எதிரான இப்படிப்பட்ட சூழல் இருந்து வருவதாலும், அடுத்தடுத்து தேர்தல்கள் வரவிருப்பதாலும் அழகிரியை மாற்றும் முடிவில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. இதை சரியாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் ப.சிதம்பரம், தனது மகனை தலைவராக்க பகீரத முயற்சி எடுத்துள்ளார்.
       

இதற்கிடையே, டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்திருப்பதில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் அப்- செட்டாகியிருப்பதால், தமிழக தலைவர் மாற்றம் குறித்து சோனியாவிடம் ஆலோசிக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறார் சிதம்பரம் என்கிறார்கள் காங்கிரஸ் கதர்சட்டையினர்.
 

சார்ந்த செய்திகள்