அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஷ்வரூபம் எடுத்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வசமிருந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசன் வசமும் எதிர்கட்சித் துணைத்தலைவர் பதவி ஆர்.பி.உதயகுமாரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்திவருகிறார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற முறையில் ரிசர்வ் வங்கிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்த நிலையில், இன்று புதிதாக 14 மாவட்டச் செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தர்மர், சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக வி.என்.பி.வெங்கட்ராமன், மதுரை மாநகர மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி ஆர். கோபாலகிருஷ்ணன் உட்பட மொத்தம் 14 பேரை அவர் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக உடன்பிறப்புகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.