தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. கூட்டணியின் சி.பி.எம். கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்த (தூத்துக்குடி) மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; "மத்திய பா.ஜ.க. அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்தது. தற்போது தேர்தல் வந்து விட்டது என்பதற்காக மக்களையும், சிறுபான்மையினரையும் ஏமாற்றி விடலாம் என்ற ஒரே காரணத்திற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. தேர்தல் நேரத்தில் ஒட்டுக்காக ஏமாற்றுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். வருமான வரித்துறையின் சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை பா.ஜ.க. அச்சுறுத்துகிறது. இப்படி வேட்பாளர்களை அச்சுறுத்துவது தேர்தல் வெற்றிக்கான வழி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நடப்பவற்றை அறிந்தவர்கள். இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் அஞ்சப்போவதில்லை. உண்மை நிச்சயம் வெளிவரும். அதனைத் தாண்டி தி.மு.க. கூட்டணி தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயக்கம் தி.மு.க. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றிருக்கிறார் தலைவர் ஸ்டாலின். அதற்குத் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஆட்சியில் இல்லாத போது அடக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, கைது நடவடிக்கைகள் வழக்குகளைச் சந்தித்தும் துவளாத இயக்கம் தி.மு.க. தி.மு.க.வின் அடித்தூண் தொண்டர்கள் தான். அவர்கள் எவரிடமும் விலை போகமாட்டார்கள். உறுதியாக நிற்கக் கூடியவர்கள்" என்றார் எம்.பி. கனிமொழி.