Skip to main content

“விவசாயிகளுக்கு எதிராகத்தான் இருப்பேன் என்கிறார் தமிழக முதல்வர்" - முத்தரசன்

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

CPI mutharasan press meet at thiruvarur

 

தமிழக முதல்வர் என்கிற பொறுப்புடன் பழனிசாமி பொதுமக்களையும், விவசாயிகளையும் காப்பாற்றுவார் என நம்பிவரும் நிலையில் விவசாயிகளுக்கு எதிராகத்தான் இருப்பேன் என்று திரும்பத் திரும்பக் கூறிவருவது பெருத்த வேதனை அளிக்கிறது என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

 

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “நாடு கொந்தளிப்பாக உள்ளது. சுதந்திரப் போராட்ட காலம் போல் இப்பொழுது விவசாய போராட்டத்தின் மூலமாகப் பெரிய நெருக்கடியும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மூர்க்கத் தனமான போரைக்  கையாண்டு வருகிறது. அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோல மின்சாரத்தைத் தனியார்மயமாக்கபோவது மிகப்பெரிய பேராபத்து.

 

விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும் என மக்கள் போராடிவருகின்றனர். 14ஆம் தேதி முதல் வேளாண் திருத்த சட்டங்கள் திரும்பப் பெறும்வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.  

 

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அதற்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

 

பொதுவாக மத்தியக் குழுவின் மீது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நம்பிக்கை இல்லை. டெல்லி சென்ற பிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறுகிறார்கள். ஆனால், சென்ற பிறகு எந்த நிவாரணமும் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு கோரியிருக்கின்ற நிதியை முழுமையாக வழங்க வேண்டும்.  

 

ரஜினி கட்சி தொடங்கும்வரை நாம் காத்திருந்து பிறகு கருத்து தெரிவிக்கலாம். பாஜகவின் ஒருபாகம்தான் இந்து மக்கள் கட்சி.  கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் 100-க்கும் மேற்பட்ட பி.ஜ.பேி. கட்சிகள் உள்ளன. இதில் இந்து மக்கள் கட்சி கடலில் வாழும் ஆக்டோபஸ் மாதிரி இரத்தத்தை உரிஞ்சும் கட்சி. பாகிஸ்தான், கஜகஸ்தான், மது ஆலை வியாபாரிகள் என காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பிவிடலாம் என நினைப்பவர்கள் விவசாயிகளிடமிருந்து தப்பிக்கவே முடியாது. 

 

தமிழக முதல்வர் என்ற பொறுப்புடன் பொதுமக்களை, விவசாயிகளைக் காப்பாற்றுவார் என நம்பிவரும் நிலையில், தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு எதிராகத்தான் இருப்பேன் என்று திரும்பத் திரும்ப கூறிவருகிறார்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்