தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சூரியபிரகாஷ், எஸ்.கே.நவாஸ் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் மே 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவிருக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அஇஅதிமுக வேட்பாளருக்குச் சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டுச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கோருகிறோம். அப்படிச் செய்தால்தான், தேனி நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் மறுவாக்குப்பதிவின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
ஆளும் அஇஅதிமுகவின் தேனி வேட்பாளர், ஒரு சில தேர்தல் ஆணைய பணியாளர்களோடு இணைந்து கொண்டு, அத்தனை தேர்தல் முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ், திமுக மற்றும் இதர எதிர்க்கட்சிகள் புகார்கள் அளித்துள்ளன. ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய அதிகார பலம், பணபலம், ஆள்பலம் ஆகியவற்றைக்கொண்டு தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் திருத்தங்கள் செய்தேனும், தன்னுடைய மகனை இத்தேர்தலில் வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கு வசதியாக, கோவையில் இருந்து சட்டவிரோதமாக தேனிக்குக் கொண்டுவரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமான புகார்களைக் கொடுத்துள்ளன.
இந்தப் புகார்களை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி, கோவையில் இருந்து முறைகேடாக கொண்டுவரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்ஙள் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இராது, அப்படி இருக்குமானால் அது தடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
ஆனால் தற்போதோ, தேனி தொகுதிக்கு 15.05.2019 அன்று மீண்டும் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளனர் என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளோம். தற்போதுள்ள இயந்திரங்களுக்குப் பதிலாக புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரின் மகனான அஇஅதிமுக வேட்பாளருக்குச் சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட விரோத உள்நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் தேர்தல் அலுவலர் அஇஅதிமுக தேர்தல் முகவர் போலவே செயல்படுவதோடு, தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களின் வாக்குகளைத் திருத்தி, முறைகேடுகள் மூலம் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியைத் தட்டிப்பறிக்க நினைக்கிறார்.
அதனால் கோவையில் இருந்தும், திருவள்ளுரில் இருந்தும் தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்குவதோடு, மக்களுடைய வாக்குகளைத் திருத்த நினைக்கும் அஇஅதிமுக வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி நியாயமான தேர்தலை தேனியில் நடத்தித் முடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள மறுவாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக நடப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக உறுதியாக நம்புகிறோம். எனவே மறுவாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைந்து ஒப்புகளை வாக்குச்சீட்டு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளோடு சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.