சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும் படி எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் சென்னையில் பாஜகவினர் நூதனமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் இந்திய குடியுரிமை சட்டத்தால் யாரவது ஒருவர் பாதிப்படைந்ததாக நிரூபித்தால் கூட ஒரு கோடி ரூபாய் பரிசு தர தயார் என வெளிப்படையாக சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பை பாஜகவினர் ஏற்படுத்தி வந்தனர். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து பேசும் போது, போஸ்டர் ஒட்டியவர்கள் தான் முதலில் பாதிப்பு அடைவார்கள். சிஏஏ சட்டத்தினால் ஆபத்து என்னவென்று தெரிந்தனால் தான் விழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்களித்து வெற்றி பெற வைத்த நாட்டு மக்களுக்கு பணியாற்றுவது மட்டும்தான் ஆட்சியாளர்களின் கடைமையே தவிர, அதை விடுத்து நாட்டின் குடிமகனா என கேள்வி கேட்பது கிடையாது என குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சி சீமானின் கருத்துக்கு பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.