நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் அமமுக கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலரில் 90க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் அமமுக கைப்பற்றிய பெரும்பாலான இடங்கள் அதிமுக செல்வாக்கு மிகுந்த இடங்கள் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தினகரன் கட்சியைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் அ.தி.மு.க.வில் இணையப் போவதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது பற்றி விசாரித்த போது, தினகரன் தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் பதவிகளை சபாநாயகர் பறித்ததில், பதவியிழந்தவர்களில் ஒருவரான சாத்தூர் சுப்பிரமணியம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூலம் அ.தி.மு.க.வில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. தினகரனை நம்பி தங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கை வீணாகிவிட்டதாக வருந்தும் மற்ற மாஜி எம்.எல்.ஏ.க்களும் தற்போது, அதே ராஜேந்திரபாலாஜி மூலம், அ.தி.மு.க. கட்சியில் மறுபடியும் இணைய முயற்சி செய்துவருவதாக சொல்கின்றனர்.