தமிழ்நாட்டின் ஊரக ஊராட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது நகர்ப்புற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்துவருகின்றன. இந்நிலையில், 159 உறுப்பினர்களுடன் ஆட்சியில் இருக்கும் திமுக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரிதாக உறுப்பினர்களைப் பெறவில்லை.
அப்படி தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தந்து, திமுகவை அதிரவைத்த கொங்கு மண்டலத்தை நகராட்சித் தேர்தல் மூலம் பிடிக்க திமுக தீவிரமாக திட்டம் தீட்டிவருகிறது. அதற்கு ஏதுவாக அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக திமுக நியமித்துள்ளது. இது அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “கொங்கு மண்டலத்தில் வேலுமணியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியே தீருவேன்னு வரிஞ்சிகட்டி நிக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதனால் அந்தத் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களையும், அங்கே ஓரங்கட்டப்பட்ட மாஜி மந்திரிகள் மற்றும் மா.செ.க்களையும் திமுக பக்கம் கொண்டுவரும் முயற்சியில் தீவிரம் காட்டறார். அந்த வகையில், அவரது தூண்டிலில் விழுந்த முதல் டிக்கெட் முன்னாள் எம்.பி. நாகராஜ். இவர் சசிகலாவின் ஆதரவாளர் என்பதால் எடப்பாடி பழனிசாமியும் வேலுமணியும் இவரை மதிக்கவே இல்லை. இதனால் விரக்தியில் இருந்த அவரை, திமுகவில் ஐக்கியமாக்கிவிட்டார் செந்தில் பாலாஜி. அடுத்தடுத்து அப்பகுதியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் திமுகவில் இணையக்கூடும் என பேச்சு எழுந்துள்ள சூழலில், செந்தில் பாலாஜி காய் நகர்த்துவதைக் கண்டு அரண்டுபோயிருக்கிறது அதிமுக தரப்பு” என்கிறார்கள்.