தொடக்கத்திலிருந்தே தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்த நிலையில், தற்போது அது தீவிரப் போக்கை எட்டியுள்ளது. ஆளுநரின் முரணான பேச்சுக்கள் அவ்வப்போது கண்டனங்களைப் பெற்று வருகின்றன. இதனால் தொடர்ந்து தமிழக அரசு, ஆளுநரின் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து வருகிறது. நேற்று நாகை சென்ற தமிழக ஆளுநருக்கு பல இடங்களில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'வாய்க்கு வந்த வார்த்தைகளை ஆளுநர் பயன்படுத்துகிறார்' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு மாநில ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகமாக ஒரு போட்டி நடக்கிறது. ஆளுநர் ஆர்.என். ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளது போலத் தெரிகிறது. மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் மூன்று ஆளுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையும் மறந்து பாஜகவால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தி தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கின்றனர். தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார் தமிழக ஆளுநர். நேற்று நாகை சென்ற ஆளுநர் ரவி பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை விமர்சித்துள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் சரியாக இல்லை என்று வாய்க்கு வந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அது குறித்து அரசிடம் கேட்டறியலாம். ஆனால் எதிர்க்கட்சியை போல மீடியாக்கள் முன்பு விமர்சனம் செய்ய கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா? நாகை சென்றவர் கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். வாய்க்கு வந்ததை பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே? தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. தமிழகத்திற்கு அதிகம் கெடுதல் நினைப்பவராகவும், இடைஞ்சலாகவும் தான் உள்ளார் ஆளுநர்' எனத் தெரிவித்துள்ளார்.