அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட சசிகலா கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார் சசிகலா. அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில், அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் கட்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ''நிழல்போல் இருந்தவர்கள் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது'' எனப் பேசியுள்ளார்.