பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் மதுரை மாவட்டம் வலையங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசுகையில், “சனாதனம் என்பது நீ உயர்ந்தவர் நான் தாழ்ந்தவர் என்ற தாழ்வு மனப்பான்மையை மக்களிடம் உருவாக்குகிறது. சனாதன கலாச்சாரம் குலக்கல்வியை வலியுறுத்துகிறது. உயர்ந்தவருக்கு ஒரு வேலை, தாழ்ந்தவர்க்கு ஒரு வேலை என்ற மனப்பான்மையை சனாதனம் வழங்குகிறது. சனாதனத்தை அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் எதிர்த்தனர்.
50 வருடங்களுக்கு முன்பே சனாதனம் எனும் கொடிய விலங்கின் முதுகெலும்பை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் ஒடித்தனர். எனவே சனாதனத்தை வேரறுக்க வேண்டியது. ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். கட்சியின் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது. கட்சியில் எனக்கு எந்த பதவிகள் வழங்கினாலும் மதிமுக தொண்டர் என்று கூறுவது தான் எனக்கு பெருமை. உண்மையில், எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை” என தெரிவித்தார்.