Skip to main content

'பிப்.21 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்' - கமல்ஹாசன் அறிவிப்பு!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

makkal needhi maiam party kamal haasan announcement

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'நடைபெற இருக்கும் 2021- ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களிலும், நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது.

 

'சீரமைப்போம் தமிழகத்தை', 'புதியதோர் புதுவை செய்வோம்' எனும் நமது இருபெரும் கனவுகளை நனவாக்க வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. நமது கட்சி நேர்மையாளர்களின் கூடாரம். திறமையாளர்களின் கோட்டை. துணிச்சல் மிக்கவர்களின் பாசறை. நாம்தான் தமிழகத்தின் பாதுகாப்புப் படை.

 

ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக, பொருளியலைச் சீரமைத்துத் தமிழகத்தை வளமாக்க முடியும். அதற்குரிய தகுதியும் அருகதையும், திறமையும் நமக்கு மட்டுமே உண்டு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். நாம் செல்லும் இடங்களிலெல்லாம் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளமே அதற்குச் சாட்சி.

 

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும், நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கானப் பணிகளைத் துவங்கிவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

 

இந்தத் தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையாக சேவை செய்யமுடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியான வேட்பாளரைப் பரிந்துரைத்தும் விருப்ப மனுக்களை அனுப்பலாம்.

 

இந்த முறை ஆன்லைனிலேயே (www.maiam.com) சுலபமாக விண்ணப்பிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில் நுட்பத்தியினைப் பயன்படுத்தி விருப்ப மனுக்களைப் பெறும் கட்சி எனும் பெருமையை அடைகிறோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

makkal needhi maiam party kamal haasan announcement


கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும் கூட தங்களுக்கு சட்டமன்ற உறுப்பினராவதற்குரிய தகுதியும், திறமையும் மக்கள் பணியில் ஆர்வமும், நேர்மையும் இருக்கிறதென கருதினால் விண்ணப்பிக்கலாம்.

 

ஒரு தொகுதிக்கு ஒரு முறை விண்ணப்பிக்க ரூபாய் 25,000 நிதி நல்கையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகை கட்சியின் தேர்தல் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்படும். தங்களது விண்ணப்பம் தேர்வானாலும் ஆகாவிட்டாலும் இத்தொகை திருப்பி அனுப்பப்படமாட்டாது. நேர்மையான ஜனநாயகத்திற்கான உங்கள் பங்களிப்பாக அத்தொகை இருக்கும்.

 

தனது முதல் தேர்தலிலேயே இத்தனை பிரம்மாண்டமான மக்கள் ஆதரவுடனும் நேர்மையான திறமையாளர்கள் புடைசூழவும் தேர்தலைச் சந்திக்கிற கட்சி எனும் பெருமிதத்துடன் உங்களை வாழ்த்துகிறேன்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்