தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது தெரிந்துவிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபு மற்றும் கவுன்சிலரான சின்னசாமிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், சில வாரங்கள் முன் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தத் தகராறு கைகலப்பாக மாறியது. இதில், இராணுவ வீரர் பிரபுவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு பிறகு மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், 10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இதில் முக்கிய குற்றவாளியாக உள்ள கவுன்சிலரின் மகன் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுகிறார். அவரும் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளார். தந்தையும் மகனும் சேர்ந்து தாக்கியதில் ராணுவத்தில் பணி செய்தவரின் உயிர் போயுள்ளது. இது சராசரியான குற்றம் இல்லை. இந்த குற்றத்திற்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். எங்களது குறைந்த பட்ச கோரிக்கை புனிதாவிற்கு அரசு வேலை, 5 கோடி இழப்பீடாக அரசு வைப்பு நிதியாக வழங்க வேண்டும். அனைத்து கட்சிகளும் அவர்கள் வளர வேண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைப்பார்கள். அது தவறு இல்லை. பாஜக மற்றவர்களுக்கு உழைப்பதற்காக இல்லை. நமது எம்.எல்.ஏக்கள் ஆட்சியில் அமர வேண்டும். நமது சித்தாந்தத்தின் அடிப்படையில் தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியை தர வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். சமுதாயத்தில் இருந்து பின் தங்கிய மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் படிக்கிறார்கள். நான் கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளை அறிக்கை என்ற ஒன்றை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளை அறிக்கை வந்துவிட்டால் நீட் தேர்வுக்கான விவாதம் அன்றே முடிந்துவிடும். கடந்த மூன்றாண்டுகளில் நடத்தப்பட்ட நீர் தேர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற பல பிரிவுகளில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்ற புள்ளி விபரத்தை அரசு வெளியிட வேண்டும். அது வந்துவிட்டால் தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டும் என நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். யார் யாரை சென்று பார்த்தாலும் கூட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யாது.” எனக் கூறினார்.