நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஆறு பேர் இறந்தது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் நெய்வேலி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன்.
அதில், "என்.எல்.சி. நிறுவனம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் வகையில் அனைத்துத் தொழிலாளர்களும் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் பணி செய்து வருகிறார்கள்.
ஆனால், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் சரிவர செய்வதில்லை. பொருளாதார வளர்ச்சி லாபம் எந்த அளவுக்கு முக்கியம் என்று கருதுகிறதோ அதைவிட தொழிலாளர்கள் உயிர் முக்கியம் என்பதை என்.எல்.சி. நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.
லாபம் ஈட்டுவதில் செலுத்தும் அக்கறையை மனித உயிரழப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் காட்ட வேண்டும். தொழிலக பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்புப் பணிகளைத் தரமான முறையிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளவேண்டும்.
என்.எல்.சி. விபத்தில்லா நிறுவனம் என்று நிலையை உருவாக்க வேண்டும். இந்தக் கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும் என்றும் சபா ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அரசுத் தரப்பில் சேர்மன் ராகேஷ் குமார், மனிதவளத் துறை இயக்குனர் விக்ரமன், திட்ட இயக்குனர் நாகேஸ்வரராவ், மின் துறை இயக்குனர் ஷாஜி ஜான், செயல் இயக்குனர் சதீஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தி.மு.க. எம்.பி. ரமேஷ், எம்.எல்.ஏ.-க்கள் கணேசன், சபா ராஜேந்திரன், துரை சரவணன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ .கலைச்செல்வன் மற்றும் பா.ம.க., த.வா.க., வி.சி.கட்சி நிர்வாகிகள் மற்றும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது சேர்மன் ராகேஷ் குமார் கூறுகையில், என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும். காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனைப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டதால் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெய்வேலி நகரில் வணிகர் சங்கத்தின் சார்பாக கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
என்.எல்.சி. நிர்வாகம் இதுபோன்ற விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படும்போது வேலை கொடுப்பதாலும் இழப்பீடு வழங்குவதாலும் மட்டும் நிரந்தரத் தீர்வை எட்டி விடமுடியாது.
தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரும் வகையில் தரமான தளவாடங்கள் பொருத்தப்பட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நிர்வாகப் பணிகளை வழங்கக்கூடாது. திறமையான வல்லுனர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும். தொழிலாளர்களை நிர்வகிக்கும், வேலை வாங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.