சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மணியன் வரவேற்று பேசினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழியல்துறைத் தலைவர் அரங்க. பாரி அறிமுக உரையாற்றினார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.பி.அன்பழகன் பங்கேற்று நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டார். அதை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் அமைச்சர்கள் அன்பழகன், சம்பத், எம்எல்ஏக்கள் சிதம்பரம் தொகுதி பாண்டியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி முருகுமாறன் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் எம்ஜிஆர் கல்வி பணி குறித்தும், சமூக பணிகள் குற்றித்தும் பேசினார்கள். இதையடுத்து விழா முடிந்த பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தனி அதிகாரிகள், தொடர்பு அதிகாரிகள் பணிக்கு அதிகமான ஊதியம் பெற்று வருவதால் அவர்களது ஊதியத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை பொறுத்தவரை தேடுதல் கமிட்டிக்கு உறுப்பினரை தேர்வு செய்வது மட்டுமே அரசின் பணியாகும் எனக் குறிப்பிட்டார். பின்னர் அருப்புக்கோட்டை சம்பவத்தை பொறுத்தவரை மார்ச் மாதம் 15ந் தேதி நடந்துள்ளது. மறுநாள் 16ந் தேதியே கல்லூரி முதல்வரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். பின்னர் சம்மந்தப்பட்ட பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை நடத்தி, அதன் உண்மை தன்மை அறிந்த பிறகு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தில் தொடர்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.