ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கியது. அதில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் அதிமுகவே நேரடியாகப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே. வாசனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இந்த இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். திமுக மக்களுடைய நம்பிக்கையை இழந்திருக்கிறது. எனவே அதனை 100 சதவிகிதம் முதன்மைக் கட்சியான அதிமுக பயன்படுத்தி வெற்றிபெறுவதற்கான யூகத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். அந்த யூகம் வெற்றி பெறும்” என்றார்.