அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார்.
அப்போது, தி.மு.க. சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் யார்? அவர் எத்தனை கட்சிக்கு போயிருக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். ம.தி.மு.க., தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டார்.
5 ஆண்டு காலம் தான் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பதவி காலம் ஆகும். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே 3 கட்சிகளுக்கு மாறியிருப்பவர் தான் செந்தில்பாலாஜி. எதிரிகளோடு சேர்ந்து அ.தி.மு.க.வை உடைத்து, ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று முயற்சித்து சில எம்.எல்.ஏக்களை அழைத்து சென்றார். அவர்கள் தற்போது நடுத்தெருவில் தான் நிற்கிறார்கள். மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பலர் ஒருங்கிணைந்து தான் செந்தில்பாலாஜியை கடந்த 2016-ல் வெற்றி பெற செய்தோம். அதையெல்லாமல் மறந்து விட்ட அவரால், மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும். அவர் ஒரு அரசியல் வியாபாரி.
செந்தில்பாலாஜி தற்போது அதை செய்வேன், இதை செய்வேன் என்று கூறுகிறார். முதலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் செய்த காரியத்தை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் அ.தி.மு.க. அரசு சார்பில் தைப்பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கினோம். ஆனால் அதை கொடுக்க விடாமல் வழக்கு போட்டு தடுத்தது தி.மு.க. தான். அதுமட்டும் அல்ல ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட போதும் கூட, அதனை நிறுத்தவும் வழக்கு தொடர்ந்தது தி.மு.க. தான்.
மேலும் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் அவரது வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்திடமும் புகார் கூறி அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆகவே ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக தி.மு.க. இருக்கிற போது, செந்தில்பாலாஜியால் எப்படி நிலம் கொடுக்க முடியும்?. மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்காமல் இருந்தாலே போதும் என்று தான் நினைக்க தோன்றுகிறது. இவ்வாறு பேசினார்.