நாடு முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை 100% மையப்படுத்த பொது மருத்துவக் கலந்தாய்வை நடத்த தேசிய மருத்துவக் கழகம் (என்.எம்.சி) முன்வந்துள்ளது.
இதன்படி நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், தன்னாட்சி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒரு கட்ட கலந்தாய்வு மூலம் நடத்த என்.எம்.சி திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. பொதுக் கலந்தாய்வை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொதுக் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படியே அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரித்துள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அகில இந்திய அளவில் பொது மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்களின் முன்னுரிமை பறிபோகும். வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பிடிக்கும் நிலை ஏற்படும். பொதுக் கலந்தாய்வை கடுமையாக எதிர்ப்போம். பொது மருத்துவக் கலந்தாய்வு நடத்த ஒன்றிய அரசு தீவிரம் காட்டும் என்றால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.