Skip to main content

ராகுல் காந்தி தகுதி நீக்கம்; உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Disqualification of Rahul Gandhi; Opposition to Udhayanidhi Stalin

 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்தத்  தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

 

இந்நிலையில் கங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மக்களவை இணைச் செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 102(1)(e) விதிகளின்படி, அவர் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து அதாவது மார்ச் 23, 2023 முதல் லோக்சபா உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல்காந்தி அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், அவரை MP பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது” என்றும் “ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் தவறான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். 2019 தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு பாஜக எம்.எல்.ஏ ஒருவரால் தொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய மிரட்டல்கள் பாசிச பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதைத் தடுக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது "பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள்தான் பா.ஜ.க.வின் முக்கிய இலக்காக இருக்கின்றனர்; குற்றப் பின்னணியில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் அமைச்சரவையில் உள்ளனர். ஆனால், பேச்சை வைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இன்று நமது ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியைக் கண்டுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்