
சென்னை சோலிங்கநல்லூரில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமூக ஊடகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று (19-04-25) நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சமூக ஊடக பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டேரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் தொகுதிக்கு இரண்டு பேர் என 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, எது போன்ற கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தகவக் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் திடீரென்று காணொளி வாயிலாக உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “நம்முடைய ஐடி விங் மீட் நடக்கும்போதே ஜூம் காலில் வந்து உங்க எல்லாரோடையும் பேச வேண்டும் என்பது தான் பிளான். ஆனால், இங்கு நெட்வொர்க் பிரச்சனையால் அதை என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் தான் இந்த ரெக்கார்ட் மெசேஜ் அனுப்புகிறேன். இதன் மூலமாக, உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஷோசியல் மீடியா படையாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. இதை நம்ம சொல்றத விட மற்றவர்களே அதை பார்த்து தெரிந்துகொள்கிறார்கள்.
இனிமேல் நீங்கள் எல்லோரும், ஷோசியல் மீடியா ரசிகர்கள் கிடையாது. என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் எல்லோரும் நம் கட்சியினுடைய வர்சுவல் வாரியர்ஸ் (Virtual Warriors) என்று தான் உங்களை அழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நம்முடைய ஐடி விங் என்றாலே ஒழுக்கமாக, கண்ணியமாக இருக்கிறார்கள் என்று எல்லோரும் சொல்ல வேண்டும். அதை மனதில் வைத்துகொண்டு வேலை பாருங்கள். கூடிய சீக்கிரமே உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன். அது வரைக்கு, உங்கள் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம்” எனப் பேசினார்.