திருப்பதி வெங்கடாசலபதியின் சொத்துக்களையும் மிஞ்சி பல லட்சம் கோடி சொத்துக்களை கொண்டது தான் திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவில். இந்த கோவிலின் தங்க வைர ஆபரணங்கள் கோவிலில் பூட்டப்பட்டு இருக்கும் நான்கு அறைகள் மற்றும் தெப்பகுளத்தின் பாதள அறைகளிலும் மலை போல் குவிந்துள்ளன. மேலும் இந்த கோவிலுக்கு நாடு முமுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு சொந்தமான 19 பசுக்கள் மற்றும் 17 கன்று குட்டிகள் கொண்ட கோசலையை டிரஸ்ட் ஓன்று பராமரித்து வருகிறது. இந்த பசுக்களின் இருந்து வரும் பாலைக் கொண்டு தான் பத்மனாபசாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள பசுக்கள் இந்தியாவிலேயே மருத்துவ குணம் கொண்ட பாலை சுரக்கும் கிர் இன வகையை சார்ந்தது.
இந்த நிலையில் அந்த கோசலையில் உள்ள பசுக்களுக்கு தீனி எதுவும் கொடுக்காமல் மேலும் மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் நோய் வாய்பட்டு கிடப்பதாகவும் பக்தா்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடா்ந்து கேரளா தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் தேவசம் போர்டு அதிகாரகள் நேரில் சென்று விசாரித்தனர்.
அப்போது பசுக்கள் எல்லாம் எலும்பும் தோலுமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பல பசுக்கள் நோய் வாய்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தன. அங்குள்ள பசுக்கள் தினமும் 15 லிட்டா் பால் கொடுத்து வந்த நிலையில் தற்போது 4 லிட்டா் பால் தான் கொடுக்கிறது. அதே போல் இந்த பசுக்களை பராமரிப்பதற்காக ஆன்லைன் மூலம் வசூல் வேட்டை நடத்தியதையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிரஸ்ட் பராமரிப்பில் இருந்து கோசலையை மீட்டு கோவில் நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்று பாஜக வினா் போர்க்கொடி தூக்கியுள்ளனா்.