Published on 20/07/2019 | Edited on 20/07/2019
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து இருந்தார். அதேபோல் சமீபத்தில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் நிச்சயம் வெளியே வருவார் என தெரிவித்திருந்தார்.
சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்போதும் இருக்கும் என தெரிவித்து இருந்தார். ஆகையால் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி வந்தாலும் ஜெயலலிதாவை போல் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தனது அரசியல் நிலைப்பாட்டில் இருப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை அழிக்க நினைக்க மாட்டார் என்றும் தெரிவிக்கின்றனர். ஆகையால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களையும், பிரிந்து கட்சி ஆரம்பித்தவர்களையும் அதிமுகவில் இணைக்க பார்ப்பார் என்றும் கூறுகின்றனர். இதனால் தான் தினகரன் சமீப காலமாக கட்சியை பதிவு செய்த பிறகே தேர்தலில் போட்டி என்று வரக் கூடிய இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.