![ADMK's master sketch DMDK who left from alliance](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qem6c0vDQjFmVK3qgXvFO53MruHpeCL6I50vHLzx8yg/1615285400/sites/default/files/inline-images/th-3_31.jpg)
சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2021) காலை 11 மணிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் கட்சித் தலைமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. ஆலோசனை முடிந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது நாளை தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்தே தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அதன் பணிகளில் வேகம் காட்டின. அதில் குறிப்பான பணி, கூட்டணி அமைப்பது. திமுகவும் அதிமுகவும் தனது தோழமை கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. இதில் அதிமுக முதலில் பாமகவுடனான தொகுதிகளை முடிவுசெய்தது. அதனைத் தொடர்ந்து பாஜகவுடனான தொகுதிப் பங்கீட்டை முடிவுசெய்தது. பாமகவின் தொகுதிப் பங்கீடு விரைவில் முடிய, பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு சற்று இழுபறியாகி பின் முடிவுக்குவந்தது.
முன்னதாக தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, ‘கூட்டணி குறித்து இன்னும் அதிமுக எங்களை அழைத்து பேசவுமில்லை; அழைப்பும் விடவில்லை. விரைவில் எங்களை அழைத்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல இடங்களில், பலமுறை தெரிவித்துவந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி அதிமுக கூட்டணி குறித்து பேச்சுக்களை ஆரம்பித்தபோதும், தேமுதிகவுடனான பேச்சில் வேகம் காட்டவில்லை. இடையில் ஒருமுறை தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவின் அமைச்சர்கள் சிலர் தனியாக அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் முதலில் அறிந்திருக்கவில்லை. சந்திப்பு நடந்து முடிந்த பிறகுதான் அதுகுறித்து அவர் கவனத்திற்குச் சென்றது. அதன்பின் அதிமுக - தேமுதிக இடையே சில கட்ட பேச்சுவார்த்தைகள் அதன் பேச்சுவார்த்தை குழுவுடன் நடந்துமுடிந்தது. ஆனால், பெரும் இழுபறியிலேயே இருந்துவந்தது.
![ADMK's master sketch DMDK who left from alliance](http://image.nakkheeran.in/cdn/farfuture/gBlKoAHdkL07Ow9hyld4uD_eUkcN_2H_oIlc-9PSuh0/1615285428/sites/default/files/inline-images/th-2_162.jpg)
பாமக கடந்த 5ஆம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் என அதிமுக, பாமக மற்றும் பாஜகவின் சின்னங்கள் பதிவிடப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை அப்போது முடிவுபெறாத நிலையிலும் தேமுதிகவின் சின்னமோ, கட்சியின் கொடியோ, பெயரோ பதிவிடவில்லை. இது அப்போது அரசியல் மட்டத்தில் பெரும் விவாதமானது. ஆனால், இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்தோ, பாமக தரப்பிலிருந்தோ எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை. அதேவேளையில் தேமுதிகவினர், கூட்டணி கட்சிக்கான முக்கியத்துவத்தை தரவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று தேமுதிகவின் அவசரக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில், தேமுதிக குறிப்பிட்ட சில தொகுதிகளை கேட்டுவந்தது. ஆனால், அதே தொகுதிகளை பாமகவும் கேட்டுள்ளது. பாமக பலமாக இருக்கும் தொகுதிகளில் தேமுதிகவிற்கு கொஞ்சம் செல்வாக்கு அதிகம். அதனால், அதிமுகவும் அத்தொகுதிகளைத் தேமுதிகவிற்கு விட்டுகொடுக்க முன்வரவில்லை.
![ADMK's master sketch DMDK who left from alliance](http://image.nakkheeran.in/cdn/farfuture/tmTBW6w59c4Lj6HTJMQtegLFelV7alGmp4A5L4FgKXQ/1615285457/sites/default/files/inline-images/th-1_769.jpg)
அதனால்தான் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் வெளியேவந்த அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ''கேட்டத் தொகுதிகளும், எண்ணிக்கையும் தராததால் நாங்கள் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தேமுதிகவிற்கு இன்றுதான் தீபாவளி. கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அதிமுக தமிழகத்தில் டெபாசிட் இழப்பார்கள். முக்கியமாக அங்கு இருக்கின்ற கே.பி.முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சியுடைய ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார். அவர் அதிமுகவிற்கு செயல்படவில்லை'' என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக, கூட்டணி குறித்து பாஜக மற்றும் பாமகவுடன் காட்டிய மும்முரத்தை தேமுதிகவிடம் காட்டவில்லை. அதனால் தேமுதிக, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது என்கின்றனர்.