தேசிய கட்சியான அந்தக் கட்சிக்கு அதிகாரம் நிரம்பிய பல தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அதில் முக்கியமான தலைவர்கள் அவர்கள். பரபரப்பாக உள்ளனர். அந்தக் கட்சியின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள தலைவர்கள் எல்லாம் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
சமீபத்தில் வடமாவட்டம் ஒன்றின் தலைநகரத்தில் அந்தக் கட்சியின் சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கான உள் அரங்க கூட்டம் நடைபெற்றது. அதற்கு அந்தக் கட்சியின் முக்கிய தலைவருடன் மாநில நிர்வாகிகளும் வந்திருந்தனர். அவர்களை ஒரு ஹோட்டலில் தங்க வைத்திருந்தனர். கட்சி நிர்வாகிகளின் இருசக்கர ஊர்வலம் அந்த மண்டபத்தை அடைந்தது. அந்த தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பேச முடியாமல் வார்த்தைகளில் தடுமாற்றம் வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போதும், அது அப்பட்டமாக தெரிந்ததாம். இதனால் எதிரில் அமர்ந்திருந்த மாவட்ட அணி நிர்வாகிகள் அதிர்ச்சியாகியுள்ளனர். அதோடு, கூட்டத்திற்கு வந்த தொண்டர்களையும் சரியாக கவனிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு மாவட்ட நிர்வாகிகள் மீது எழுந்து, அதுவும் அங்கு பரபரப்பாகியுள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், “அவர்களின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் கட்சியில் முக்கிய இடத்தில் இருந்துகொண்டு, கட்சி கூட்டத்துக்கு வரும்போது இப்படி நடந்துக்கொள்வது சரியாக இல்லை. இது வெளியே தெரிந்தால் அவர்களுக்கு அசிங்கமோ, இல்லையோ அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தெரியாது. ஆனால் கட்சிக்குத்தான் அவப்பெயர். இதுபற்றி மாநில தலைமையில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். தேசிய தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்கள்” என்றார்.