தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அறிவுறுத்தல் படி தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் வரும், 2022 ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில், கல்வி-சமூகநீதி-கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய மாநாடு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. திமுக இளைஞர் அணிச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இம்மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பங்கேற்று கல்வி-சமூகநீதி-கூட்டாட்சி தத்துவம் காக்கின்ற இயக்கமாக மாணவர் அமைப்புகள் செயல்பட சிறப்புரை ஆற்றுகிறார்.
இம்மாநாடு இரண்டு நாட்கள், பல்வேறு அமர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இந்திய அளவிலான பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மேனாள் நீதியரசர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி, கலந்துரையாடவுள்ளனர்.
“உங்களது கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு பணியாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயரிய நோக்கை சிதைக்க நினைக்கும் பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்வியின் மீதான மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களையும், ஆணைகளையும் எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் முதற்படியாய் இம்மாநாடு அமைய உள்ளது.
இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கேரளா அரசின் தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் அய்.இளங்கோவன், தெலுங்கானாவைச் சேர்ந்த திராவிடச் சிந்தனையாளர், சமூகச் செயற்பாட்டாளர் பி.ஸ்ரீகாந்த் ஸ்மித், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் பேராசிரியர் அனில் சத்கோபால், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கல்வி ஆர்வலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன், சமூகச் செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், சமூகச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி ஆகியோர் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹீவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.சந்தோஷ்குமார், முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி, சமூகச் செயற்பாட்டாளர் கண்ணன் கோபிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த கன்னையா குமார், பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் சீமா சிஷ்டி, வங்காள தேசியவாதி கார்கா சாட்டர், எழுத்தாளர் மற்றும் பெரியாரிஸ்ட் திலீப் மண்டல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.
மாநாடு பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியது:
1) நீட், க்யூட் நுழைவு தேர்வுகளும் அதன் பின்னுள்ள மர்மங்களும்
2) தேசிய கல்விக் கொள்கை: ஒரு பாசிச நோக்கம்
3) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 7ஆம் அட்டவணை ஒரு மறுபார்வையும்,
கல்விக் கொள்கைகளில் மாநில சுயாட்சியும்
4) இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்
5) காவிமயமாகும் கல்வி நிறுவனங்கள்
6) கூட்டாட்சிக்கு எதிரான அச்சுறுத்தல்களும்; கூட்டாட்சித் தத்துவத்தின் மீள்எழுச்சியும்
7) சிதையும் ஜனநாயக நிறுவனங்கள்
8) திராவிட இயக்கமும்; பெண்களின் முன்னேற்றமும்
9) தமிழக மருத்துவ கட்டமைப்பும், மக்கள் நல மருத்துவமும்
10) ‘திராவிட மாடல்’ வளர்ச்சி
11) இந்திய ஒன்றியமும், கூட்டாட்சித் தத்துவமும்
தி.மு.க. மாணவர் அணியின் மூலம் நடத்தப்படுகின்ற இந்த மாநாட்டில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு, அனைத்து கட்சிகளின் மாணவர் அமைப்புகள், கட்சிகளை சாராத மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளிலிருந்தும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.