
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வந்தனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது.
இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, ஆபாச பேச்சு பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு தொடர்பான சலசலப்பு அடங்காத நிலையில், பொது மேடையில் குழந்தை பெற்றெடுப்பது குறித்து திமுக எம்.பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேஷம்பாடி பகுதியில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுமான பணிக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (18-04-25) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுமானப் பணி ஆணைகளை வழங்கினார். இதில், திமுக எம்.பி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு குழந்தை பெற்றெடுப்பது குறித்து சர்ச்சையாக பேசினார். அமைச்சர் கலந்து கொண்டு அரசு நிகழ்ச்சியில், அவர் முன்னிலையிலேயே திமுக எம்.பி கல்யாணசுந்தரம் குழந்தை பெற்றெடுப்பது குறித்து பேசியிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது.