அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் விவாதமாகி அதிமுக தற்பொழுது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் அண்மையில் பொதுக்குழு செல்லும் எனவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெற்றிகரமாக அமையாத நிலையும் தற்போது உள்ளது.
இதனிடையே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. எதிர்தரப்பினர் விளக்கம் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கை மார்ச் 17க்கு தள்ளி வைத்தது.
நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனோஜ் பாண்டியன் வழக்கோடு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோரது வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜர் ஆகி வாதிட்டார். வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி பிரபாகர் தரப்பு, கட்சி சட்ட விதிகளை பின்பற்றாமல் தங்களை நீக்கம் செய்ததாகவும் விதிமுறைப்படி தங்கள் தரப்பின் வாதங்களைக் கேட்கவில்லை என்றும் சர்வாதிகாரப் போக்குடன் இபிஎஸ் செயல்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். கட்சியில் இருந்து நீக்கும் முன் குற்றச்சாட்டு அறிக்கையை வழங்கி இருக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் வழங்கும் முன் சஸ்பெண்ட் தான் செய்ய முடியுமே தவிர நீக்கம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். 2022 ஜூலை 11க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக என்ற பதவியே நீடிக்கிறது. அப்படி இருக்கும் போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இபிஎஸ் சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர், பொதுக்குழு இடைக்கால பொதுச்செயலாளருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தித்தான் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஏப்ரல் 11 அன்று ஒத்திவைத்தார்.