சென்னை, சத்தியமூர்த்தி பவனில், காமராஜர் பிறந்த நாள் விழாவை ஒட்டி, 'பெருந்தலைவரின் பொற்கால ஆட்சி' என்ற, தலைப்பில் கருத்தரங்கம் 15,07.2019 திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், பாரதிராஜாவின், முதல் மரியாதை படத்தில், 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்ற, ஒரு வசனம் வரும். அதைப்போல, எனக்கும், ஒரு உண்மை தெரியாததால், இரவில் துாக்கம் வருவதில்லை. நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக, குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன என்ற கேள்வி எனக்கு எழுகிறது என்று கூறினார்.
திருச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு திருநாவுக்கரசர், உதயநிதி போட்டியிடுவதாக இருந்தால், காங்கிரஸ் விட்டுக் கொடுக்க தயார் என்றார். இந்த நிலையில் கே.எஸ். அழகிரி, குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன என்று கூறியுள்ளது திமுக - காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், குமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நாங்குநேரி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என அக்கட்சி தலைவர்கள் விரும்புகின்றனர்.