உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் போட்டி கண்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவின் முகமாகவே உள்ளது. கோவாவில் மட்டும் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்தாலும் தற்பொழுது 19 இடங்களில் அங்கு பாஜக முன்னனியில் உள்ளது. காங்கிரஸ் 12 இடங்களில் உள்ளது. ஐந்து மாநிலத்தில் மொத்தமாக உள்ள 690 தொகுதிகளில் வெறும் 68 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பாஜக பஞ்சாப்பை தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் முன்னணியில் உள்ளது.
பாஜக வெற்றிமுகம் கண்டிருக்கும் நிலையில் தேர்தல் நடைபெறாத மாநிலங்களிலும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் பாஜக தலைமை அலுவலகம் உள்ள சென்னை தி.நகர் கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவின் இந்த வெற்றி பற்றி குறிப்பிடுகையில், ''தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தி யாரும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் உழைப்புக்கு ஊதியம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்தியது உ.பி.யில் பாஜக வெற்றி பெற உதவியுள்ளது. இதன் பிறகு பெட்ரோல் விலை உயர்வு இருக்குமா? இருக்காதா? என்பதைக் கணித்துச் சொல்ல நான் வல்லுநர் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.