கரோனா வைரஸின் கோர முகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவில் துவங்கி கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த இரண்டு எம்.பி.க்களுக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
"அவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உருவாக காரணம் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டதுதான்" என்கிறார்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும். மேலும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கும் கரோனா தொற்று இருக்குமோ என்கிற சந்தேகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தோம், "கடந்த 30 ஆம் தேதி காலை மயிலாடுதுறை புதிய மாவட்ட உருவாக்கம் குறித்து மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. அன்று மாலையே மயிலாடுதுறையிலும் கூட்டம் நடைபெற்றது. இரு கூட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகளும், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு, மாவட்ட பிரிவினையை சம்பந்தமான தங்கள் கருத்துகளை கூறினர்.
இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜீம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கமும் இரண்டு இடங்களிலும் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இருவருமே இரண்டு மேடைகளிலும் அருகருகே அமர்ந்திருந்திருந்தனர்.
இந்தநிலையில் ஒன்றாம் தேதி மாலை செல்வராஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல் மிகவும் சோர்வாக இருப்பதாக கூறியதால் அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் கூறினர். அதனால் நாகையில் தனிமையில் தங்கியிருந்தார். ஆனால் நேற்று இரண்டாம் தேதி அவருக்கு மேலும் உடல் நிலை அதிகமாக சோர்வடைய, கரோனா பரிசோதனை முடிவிலும் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அதன் பிறகு அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில்தான் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ,ராமலிங்கத்திற்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிறகு அங்கிருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலர் லலிதாவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதோடு இரண்டு கூட்டத்திலும் கலந்துகொண்ட மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரியவருகிறது. மயிலாடுதுறையில் நடைபெற்ற அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு விழாவில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை.